<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>
மாற்றம் செய்த நாள்:  ஞாயிறு, அக்டோபர் 04,2015, 4:30 AM IST
பதிவு செய்த நாள்:        ஞாயிறு, அக்டோபர் 04,2015, 1:58 AM IST
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு லட்சம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் அபிமன்யூ கூறினார்.
2 நாள் மாநாடு பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு (பி.எஸ்.என்.எல். சி.சி.டபிள்யூ.எப்) சார்பில் 3–வது அகில இந்திய 2 நாள் மாநாடு நேற்று நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தொடங்கியது. இந்த மாநாட்டுக்கு பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு அகில இந்திய தலைவர் ஏ.என்.நம்பூதிரி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்மநாபன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் தபஷ்குமார் கோஷ் செயல் அறிக்கை சமர்ப்பித்தார்.
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் பி.அபிமன்யூ, உதவி பொதுச்செயலாளர் செல்லப்பா, வட்டார செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன், பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க அகில இந்திய உதவி தலைவர் முருகையா, சி.ஐ.டி.யூ. உதவி பொதுச்செயலாளர் கருமலையான் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
முன்னதாக பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் அபிமன்யூ நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–
நிரந்தரம் செய்ய வேண்டும் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படவில்லை. இ.பி.எப். சலுகை முறையாக நிறைவேற்றப்படவில்லை. அவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவது, நிரந்தர ஊழியர்களுக்கு இணையான பணிகளை மேற்கொண்டு வரும் 1 லட்சம் ஒப்பந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் 15 ஆண்டுகளுக்கு மேலாக அதே வேலையை செய்து வருகிறார்கள். எனவே 1 லட்சம் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதற்கு எங்களது சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே அவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அபிமன்யூ கூறினார்.
தீர்மானங்கள் மாநாட்டையொட்டி நேற்று காலை நாகர்கோவில் கே.பி.ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். சேவை மையத்தில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் பேரணியாக மாநாடு நடைபெற்ற திருமண மண்டபத்துக்கு வந்தனர். மாநாடு மற்றும் பேரணியில் வரவேற்புக்குழு தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பெல்லார்மின், துணைத்தலைவர் சுயம்புலிங்கம், பொதுச்செயலாளர் வினோத்குமார், உதவி பொதுச்செயலாளர் செல்வம், துணை பொதுச்செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் விஸ்வநாதன், உதவி பொருளாளர் ஜெயபால் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இ.பி.எப்., இ.எஸ்.ஐ. சலுகைகளையும், தொழிலாளர் நலச்சட்டங்களைஅமல்படுத்த வேண்டும், மாதந்தோறும் குறைந்தபட்ச ஊதியம் 15 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2–வது நாள் மாநாடு நடைபெறுகிறது.