<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும்

சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும்
ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை
 மன்னார்குடி, நவ. 3 -
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ரயில்வேயின் நிரந்தர துப்புரவுத் தொழிலாளர்கள் பெறும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18,000 - ஐ ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் வழங்கவேண்டும் என ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. மனோகரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.எஸ்.ஹேகர், எஸ்.ஏ.போப்டி அடங்கிய இருநபர் பெஞ்ச் கடந்த அக்டோபர் 26ம் தேதி பஞ்சாப் அரசுக்கு எதிரான ஜெகஜித் சிங் வழக்கில் அரசியல் அமைப்பு சாசனம் தந்த உரிமை அடிப்படையில் சம வேலைக்குசம ஊதியம் தர வேண்டும் என்றும், தற்காலிக தொகுப்பு மற்றும் ஒப்பந்த ஊழியர்களை மாறுபட்ட முறையில் நடத்துவதை கண்டித்தும் இறுதி தீர்ப்பு வழங்கி உள்ளது.
மேலும் இந்தத் தீர்ப்பு, ஒத்த வேலையை செய்யும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியர்களை விட குறைந்த ஊதியம் வழங்குவதை சுரண்டல், அடிமைபடுத்துதல், அதிகாரத் தன்மை நிலைபாட்டை வெளிப்படுத்துதல் என்றும் கடுமையாக சாடியிருக்கிறது. அகவிலைப்படியோடு கூடிய சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு மற்றும் தனியார் களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளது.தெற்கு ரயில்வேயில் மட்டும் பணியாற்றும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களில் ஆயிரத்து நானூறுக்கும் மேற்பட்டோர் தினக்கூலி அடிப்படையில் தொடர்ந்து பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள்.
இவர்களுக்கு மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை குறைந்தபட்ச தினக்கூலி ஆறு மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து உத்தரவு வழங்கும். கடந்த செப்டம்பர் மாதம் ‘ஏ’ தர நகரத்திற்கு ரூ.374ம், ‘பி’ தர நகரத்திற்கு ரூ.312ம், ‘சி’ பிரிவிற்கு ரூ.250ம் என தினக்கூலியை நிர்ணயித்தது. மாத ஊதியமாக இவைசேர்த்து வழங்கப்படுகிறது. பல இடங்களில் முறைகேடுகளும் நடக்கின்றன.உச்சநீதிமன்ற இந்த தீர்ப்பின் அடிப்படையில் ரயில்வேயின் நிரந்தர துப்புரவுத்தொழிலாளர்கள் பெறும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18,000- ஐ ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் வழங்க மத்தியஅரசு தொழிலாளர் துறை மூலம் உத்தரவுவழங்க வேண்டும் என ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் கோருகிறது. இவ்வாறு டி. மனோகரன் கூறியுள்ளார்.

நன்றி தீக்கதிர் திருச்சி பதிப்பு